search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதைப்பொருள் குற்றவாளிகள்"

    பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் குற்றங்களை தடுக்கும் வகையில் இலங்கையில், 19 பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
    கொழும்பு:

    குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இலங்கையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு வந்தது. இதற்காக வெளிக்கடை சிறையிலும், கண்டி போகம்பறை சிறையிலும் தூக்கு மேடைகள் அமைக்கப்பட்டன. கடந்த 1976-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ந் தேதி பப்புவா என்பவருக்கு இலங்கையில் கடைசியாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் மரண தண்டனையை நிறைவேற்றுவது நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது இலங்கை சிறைகளில் 500-க்கும் மேற்பட்ட தூக்கு தண்டனை கைதிகள் உள்ளனர்.

    இந்த நிலையில் இலங்கையில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை, கொலைகள், போதைப் பொருள் விற்பனை போன்ற சமூக விரோத செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இவற்றுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்றால் மீண்டும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    பொதுமக்களின் கோரிக்கை குறித்து இலங்கை பாரளுமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக விவாதம் நடைபெற்றது.

    அதைத் தொடர்ந்து போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 19 பேருக்கு தூக்குத்தண்டனையை நிறைவேற்ற இலங்கை மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.

    மந்திரிசபையின் ஒப்புதலைத் தொடர்ந்து தூக்கு தண்டனை குற்றவாளிகளுக்கான தண்டனையை நிறைவேற்றுவதற்கு சட்ட ரீதியான பணிகள் 42 ஆண்டுகளுக்கு பின்னர் தொடங்கியுள்ளது.

    இதில் முதற்கட்டமாக, தொடர்ந்து போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட 19 பேருக்கு, மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இது தொடர்பாக பவுத்த சாசன மந்திரி காமினி ஜெயவிக்ரம பெரேரா, நிருபர்களிடம் கூறும்போது, போதைப்பொருள் குற்றத்துக்காக தண்டனை பெற்றவர்கள் சிறைக்குள் இருந்து கொண்டே குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 19 பேரின் தண்டனையை நிறைவேற்ற மந்திரி சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார். 
    ×